வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா உறுதி: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 45 கடைகளும் மூடல்!

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக 45 கடைகளும் மூடப்பட்டிருக்கின்றன. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் மொத்தமாக 707 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் மூலமாக அப்பகுதி மக்களுக்கு தினந்தோறும் பொருட்கள் விநியோகப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறை ரீதியாக ஒவ்வொரு நாளுக்கும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனையானது நடத்தப்பட்டது.

அதில் வெளியான முடிவின் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் 45 கடைகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா தொற்று பாதித்த 45 கடைகளும் உடனடியாக மூடப்பட்டு தற்போது அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல நோய் தொற்று பாதிக்கப்பட்ட கடைகளுக்கு வந்து சென்ற பொதுமக்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இன்று முழுவதும் 45 கடைகளும் மூடப்படும். இதற்கு அடுத்தபடியாக மீதமுள்ள கடைகளில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று மூடப்பட்டுள்ள கடைகளுக்கு மாற்று ஊழியர்களை தற்காலிகமாக நியமித்து நாளை முதல் ரேஷன் கடைகள் செயல்படும் என்று வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: