சென்னை: கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப மனுதாரர் சங்கத்துக்கு அறிவுறுத்தியிருந்தது.