பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு: ஆகஸ்ட் மாதம் இறுதி வரை இலவச நீட் பயிற்சி வகுப்பு

சென்னை: நீட் தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு(நீட்) மே மாதம் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. இந்நிலையில் நீட் தேர்வில் அதிக தேர்ச்சி பெறும் வகையில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது. இதில் 7 ஆயிரம் மாணவ, மாணவியர் இலவச பயிற்சி பெற பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு கடந்த மாதம் நீட் பயிற்சி தொடங்கப்பட்டு மாணவர்களிடம் உள்ள லேப்டாப்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை ஜூலை 26ம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால், ஜூலை மாத இறுதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று அரசு அறிவித்து விட்டதால், நீட் தேர்வை செப்டம்பர் 13ம் தேதி நடத்தப் போவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துவிட்டது. இதனால், தமிழகத்தில் இலவச நீட் பயிற்சியை ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: