வரும் ஆகஸ்ட் 14ம் தேதிக்குள்மாநில நல்லாசிரியர் விருதுக்கு பட்டியல்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை: மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு தகுதியுள்ள ஆசிரியர்களை தேர்வு செய்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஆகஸ்ட் 14ம் தேதிக்குள்  பட்டியல் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப்பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதாக டாக்டர் ராதாகிருஷ்ணன்  விருது வழங்கப்படுகிறது.  இந்த ஆண்டு விருது பெறுவோரை தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா செப்டம்பர் 5ம் தேதி நடத்தப்பட்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

இதற்காக மேற்கண்ட பள்ளிகளில் 2019-20ம் கல்விஆண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை தேர்வு செய்து பரிந்துரை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட அளவில் குழு  அமைத்து அரசாணையில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, அவர்கள் விவரங்களையும் கருத்துகளையும் பெற்று ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் நடத்தை விதிகளுக்கு முரணாக டியூஷன் சென்டர் வைத்திருத்தல், வணிக ரீதியாக கல்வியை பயிற்றுவித்தல் மற்றும் தனியார் பள்ளிகளில் நிர்வாகிகளாக இருக்கும் ஆசிரியர்கள் ஆகியோரை பரிந்துரை செய்யக்கூடாது. பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர்கள் எந்த புகாரிலும் சிக்காதவராக இருக்க வேண்டும்.

அரசியல் ஈடுபாடு, குற்றப்பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அப்படி பரிந்துரை செய்து பின்னாளில் அவர்கள் விருது பெற்றது தெரியவந்தால் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்களே பொறுப்பேற்க வேண்டும். துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். விருதுக்கு தகுதியுள்ளவர்களில் தலைமை ஆசிரியர்கள் 20 ஆண்டுகளும், இதர ஆசிரியர்கள் 15 ஆண்டுகளும் பணியாற்றி இருக்க வேண்டும்.

Related Stories: