அரசு நிர்ணயித்த விலையில் மதுபானம் விற்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: டாஸ்மாக் இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு நிர்ணயித்த விலையில் மதுபானம் விற்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என டாஸ்மாக் இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் குல்லு படையாச்சி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2003-ம் ஆண்டு டாஸ்மாக் விதிப்படி, அரசு நிர்ணயித்த விலையில்தான் மதுபானங்களை விற்க வேண்டும். அதிக விலைக்கு விற்கத் தடை விதிக்க வேண்டும். விலை பட்டியல் ஒட்ட உத்தரவிட வேண்டும், எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கில் முன்னதாக நடைபெற்ற விசாரணையின்போது, அரசு நிர்ணயித்த எம்ஆர்பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா? மதுபானங்கள் விற்கும்போது, ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா? ஒவ்வொரு மதுபானக் கடையிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிறதா? அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கண்டுபிடிக்கப்பட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு விளக்கம் அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், டாஸ்மாக் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த இடம்பெற்றிருந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாகத்தின் பதில் மனுவுக்குப் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்றும் மீண்டும் விசாணைக்கு வந்தபோது, டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையில் மதுபானம் விற்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என டாஸ்மாக் இயக்குனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அரசு உறுதியளித்துள்ளது. அரசு அளித்த பதிலை ஏற்றுக்கொண்ட உயநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: