வெளிமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழகம் பிழைக்காது என்ற நிலை உள்ளது : தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்

சென்னை : ரேஷன் கார்டு இல்லாத தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தமிழக அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.வெளிமாநில தொழிலாளர்களுக்கு தங்க இடம், உணவு, நிவாரணம் வழங்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவு முழுமையாக பின்பற்றப்படவில்லை என்று வழக்கறிஞர் சூரியபிரகாசம் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.இந்த முறையீட்டினை நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு இன்று விசாரித்தது. அப்போது ரேஷன் கார்டு இல்லாத வெளிமாநில தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் வாதிட்டார்.

அப்போது வெளிமாநில தொழிலாளரை நம்பித்தான் தமிழகத்தில் தொழில்கள் நடக்கும் நிலை உள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், வெளிமாநில தொழிலாளர்கள்  இல்லை என்றால் தமிழகம் பிழைக்காது என்ற நிலை உள்ளதாகவும் வெளிமாநில தொழிலாளர்கள் இல்லாததால் தமிழகத்தில் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.அத்துடன் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் பொருள், நிவாரணம் வழங்க முடியுமா என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Related Stories: