கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும்: கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவரை சந்திக்க முடியாமல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனோ அறிகுறிகள் இருக்கும் பலர் மருத்துவரை பார்க்க முடியாமல், தங்களுக்கு தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாமல் பதற்றத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதை அரசு கவனிக்க வேண்டும். பரவலான பரிசோதனை  என்பதை தொடக்கத்தில் இருந்தே மநீம வலியுறுத்தி வருகிறது. அதை செய்யாததால், சென்னையில் மட்டுமே கொரோனா இருப்பது போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு, அதிலிருந்து தப்பிவிடும் நோக்கத்தில், மக்கள் தங்கள் குடும்பத்துடன் சென்னையில் இருந்து வெளியேறியது கடந்த மாதம் நடந்தது.

தற்போது பிற மாவட்டங்களில் பெருகும் தொற்று மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள  நிலையையே காண்பிக்கிறது. தமிழகத்தில் 95 ஆய்வகங்களில் ஒருநாளில் 35 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது என்று அரசு தெரிவித்தாலும், மாநிலம் முழுவதும் பரவியுள்ள நோய் கிருமியின் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு இன்னும் முனைப்புடன் செயல்பட வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவரின் அனுமதி சீட்டுக்காக காத்திருக்காமல், பரிசோதனைக்காக ஆய்வகங்களை நேரடியாக அணுகலாம் என்று உடனே அறிவிக்க வேண்டும். பரிசோதனைகளின் கட்டணத்தை குறைக்க வேண்டும். கடந்த மாதம் பரிசோதனையின் கட்டணத்தை குறைத்து டெல்லி மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. அதுபோன்றோ அல்லது அதைவிட கட்டணத்தை குறைத்தோ தமிழகத்தில் செய்தால், மக்கள் உயிர் காப்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இல்லாமல் செய்ய முடியும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related Stories: