×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள்: சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மற்றும் காஞ்சிபுரம் பெருநகராட்சி உட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர், தமிழ்நாடு மறுவரையறை தேர்தல் ஆணைய செயலர் சுப்பிரமணியன், கலெக்டர் பொன்னையா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். கொரோனா பரவலை தடுக்க, கடந்த மார்ச் 24ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, சில தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பட்டுநூல் சத்திரம் அரசு நடுநிலைப் பள்ளி, சந்தவேலூர் அரசு ஆரம்பப் பள்ளி, காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் நடுத்தெரு நகராட்சி பள்ளி ஆகிய பகுதிகளில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. இங்கு, பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. இதனை, காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் தமிழ்நாடு மறுவரையறை தேர்தல் ஆணைய செயலர் சுப்பிரமணியன், கலெக்டர் பொன்னையா ஆகியோர் நேற்று நேரில் செய்து ஆய்வு செய்தனர்.

மேலும் மருத்துவ முகாமில், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால், உடனடியாக அவர்களுக்கு பரிசோதனை செய்வது குறித்து சுகாதார பணியாளர்களிடம் கேட்டறிந்தனர். அதேபோன்று, காஞ்சிபுரம் பெருநகராட்சியில் பிள்ளையார்பாளையம் பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, சத்து மாத்திரைகள், எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்குவதையும், கொரோனா தொற்றால் தனிமைபடுத்தப்பட்டவர்களின் வீடுகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுவதையும் பார்வையிட்டனர். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், காஞ்சிபுரம் சப் கலெக்டர் சரவணன் உள்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.

Tags : Coronal ,Kanchipuram district , Kanchipuram District, Corona Dissemination, Prevention Activities, Special Superintendent, Inspection
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக...