கொரோனாவால் மூச்சுத்திணறல் அதிகரிப்பு அரசு மருத்துவமனைகளில் கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர்கள்: உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தற்போது வரை மாநிலம் முழுவதும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, குறைவான பாதிப்பு, நடுநிலையான பாதிப்பு, அதிகமான பாதிப்பு என்ற அடிப்படையில் அவர்கள் பிரிக்கப்படுகின்றனர். இதில், குறைவான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் இருந்தும், நடுநிலை மற்றும் அதிகமான பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது, கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் தங்களின் பாதிப்பை வெளியே சொல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். அவர்கள் பாதிப்பு அதிகமான பிறகுதான் மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னரே திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விடுகின்றனர். மூச்சுத்திணறல்தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு மூச்சு திணறலால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட உடன் ஆக்சிஜன் அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி, 31 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 162 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்படுகிறது. குறிப்பாக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 20 கிலோ லிட்டர் வைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 20 கிலோ லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்படுகிறது.

அதே போன்று, ஸ்டான்லி மருத்துவமனையில் 10 கிலோ லிட்டர் தேவைப்படும் நிலையில் தற்போது 10 கிலோ லிட்டர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 13 கிலோ லிட்டர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 13 கிலோ லிட்டர், ராயப்பேட்டையில் 6 கிலோ லிட்டர், கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர், தாம்பரம் மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர், மதுரை மருத்துவ கல்லூரியில் 20 கிலோ லிட்டர் என மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 3 லிட்டர் ஆக்சிஜன் சுவாசிக்க தேவைப்படுகிறது. 1 கிலோ லிட்டர் மூலம் 300 பேருக்கு ஆக்சிஜன் வழங்கலாம். தற்போதைய சூழலில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பலருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதற்காகவே, கூடுதலாக சிலிண்டர் வைக்கப்படுகிறது. இந்த சிலிண்டர் மூலம் மூன்று வகையான காற்று நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. தற்போது, இந்த ஆக்சிஜன் வைக்கப்படுவதன் மூலம்தான் நோயாளிகள் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: