குடியிருப்புகளை மிரட்டும் காட்டுயானைகள்: பயிருக்கும் பாதுகாப்பில்லை உயிருக்கும் பாதுகாப்பில்லை.! கொடைக்கானல் மக்கள் குமுறல்

கொடைக்கானல்: குடியிருப்புப் பகுதிகளில் நடமாடும் காட்டுயானைகளால் கொடைக்கானல் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பெருமாள்மலையை அடுத்து பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம் ஆகிய குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவை, அப்பகுதியில் விளைநிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்கின்றன. தற்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடுவதால், உயிர் பயத்தில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அச்சுறுத்துகின்றன. இவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நிரந்தரமான தீர்வு காணவில்லை. வன ஊழியர்களைக் கொண்டு அவ்வப்போது வனப்பகுதிக்குள் விரட்டுவதோடு, தங்களது பணி முடிந்து விடுவதாக வனத்துறையினர் நினைக்கின்றனர். இதனால், வனவிலங்குகளின் நடமாட்டம் மலைப்பகுதியில் சர்வ சாதாரணமாக உள்ளது. காட்டுயானை, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் அனுப்ப நிரந்தர தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.

Related Stories: