கொரோனா ஊரடங்கில் தலைதூக்கும் கந்து வட்டி கொடுமைகள்!: கோவையில் கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தற்கொலை

கோவை: கொரோனா ஊரடங்கில் கந்துவட்டி கொடுமைகள் தலைதூக்கியுள்ளதால் பல்வேறு ஊர்களில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் மண்ணூரில் கந்துவட்டி கொடுமையால் கூலி தொழிலாளியான மூர்த்தி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அதே ஊரில் வசிக்கும் தனிநபருக்கு சொந்தமான தோட்டத்தில் மூர்த்தி கூலி வேலை செய்து வந்துள்ளார். கூலிக்கான முன்பணத்தை கொடுத்துவிட்டு கொத்தடிமை போல் மூர்த்தியிடம் வேலை வாங்கியதாக தெரிகிறது. தற்போது கொரோனா ஊரடங்கால் வேளைக்கு செல்லாததால் கொடுத்த பணத்திற்கு கந்துவட்டி கேட்டு மிரட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதேபோன்று ஊரில் உள்ள பலரிடமும் முன்பணம் கொடுத்துவிட்டு கந்துவட்டி வசூலித்து வருவதாக தோட்ட உரிமையாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சாராட்சியர் அலுவலகம் முன்பு கந்துவட்டி கொடுமையால் முடி திருத்தும் தொழிலாளி மனைவியுடன் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஊதாமூரை சேர்ந்த ஐயப்பன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த டீ கடை உரிமையாளரிடம் 5 ஆண்டுகளுக்கு முன்பு கந்து வட்டிக்கு கடன் பெற்றதாக தெரிகிறது. ஊரடங்கால் தற்போது வட்டி கொடுக்க முடியாத சூழலில் டீ கடைக்காரர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக விருத்தாசலம் காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

Related Stories: