2 ஆயிரம் படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக ராஜிவ் காந்தி மருத்துவமனை மாற்றம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை : சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை 2 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் பணி நடந்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 43 மருத்துவ துறை சார்ந்த மூத்த இயக்குனர்களுடன் கொரோனா சிகிச்சை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேட்டரி வாகனத்தை ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

20 படுக்கைகளுடன் தொடங்கிய இந்த மருத்துவமனை 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா மருத்துவமனையாக உள்ளது. 2 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய முழுவதும் கொரோனா மருத்துவமனையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு வகையான நவீன கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனா நோயாளிகள் 15 ஆயிரம் பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. தீவிர அறிகுறியுடன் வருபவர்களை அழைத்து செல்ல அதிநவீன பேட்டரி கார் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள 20 கோடி மதிப்புள்ள புற்றுநோயை குணப்படுத்தும் லினியர் ஆக்ஸிலேட்டர் கருவியையும் மற்றும் 15 கோடி மதிப்புள்ள பெட் ஸ்கேன் கருவியையும் இன்று முதல்வர் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார்.

புதிதாக அர்ப்பணிக்கப்பட உள்ள கிண்டி அரசு கொரோனா மருத்துவமனையிலும் யோகா மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஸ்டான்லி மருத்துவமனையிலும் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவர்களும் பிபிஇ கிட் அணிந்து சென்று யோகா பயிற்சி அளிக்க அனுமதித்து வருகிறோம். அதிகரித்து வரும் எண்ணிக்கையை பார்த்து பயமோ, பதற்றமோ கொள்ளாமல், அரசின் அறிவுரைகளை பின்பற்றி ஒத்துழைப்பு அளித்தால் சென்னையில் குறைவு ஏற்பட்டது போல நல்ல நிலைக்கு செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: