சென்னையில் காசிமேடு உள்ளிட்ட இடங்களில் சமூக விலகலுடன் மீன் கடைகள் அமைப்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை..!!

சென்னை: சென்னையில் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் காசிமேடு உள்ளிட்ட இடங்களில் சமூக விலகலுடன் மீன் கடைகள் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மீனவர்கள் கடந்த 3 மாதமாக கடலுக்குச் செல்லாமல், அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியாமல் தவித்து வருகின்றனர். அத்துடன் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு மீன் விற்பனைச் சந்தையும் மூடப்பட்டது. மேலும் பெரிய ரக மோட்டார் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில், சிறிய ரக மீன்பிடி படகுகளான வல்லம் உள்ளிட்டவை கரையோர மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்தன, இருப்பினும் அவற்றைச் சந்தைப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் மீண்டும் மீன்பிடிக்கத் தயாராகி வரும் நிலையில், தற்காலிகமாக ஒரு மீன் விற்பனைச் சந்தையை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்குட்பட்ட பகுதியில் அரசு அமைத்து வருகிறது.

சுமார் 150 விற்பனையாளர்கள் விற்பனை செய்யக்கூடிய அளவில் இந்த தற்காலிகச் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. அதில் காசிமேடு உள்ளிட்ட இடங்களில் சமூக விலகலுடன் மீன் கடைகள் அமைப்பது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் இந்த ஆலோசனையானது நடைபெறுகிறது.

Related Stories: