கோயம்பேடு சந்தையை விரைவில் திறக்கக்கோரி சி.எம்.டி.ஏ அலுவலகம் முன்பு வியாபாரிகள் போராட்டம்...! 200க்கும் மேற்பட்டோர் கூடியதால் பெரும் பரபரப்பு!!!

சென்னை:  சென்னையில் கோயம்பேடு சந்தையை திறக்கக்கோரி  சி.எம்.டி.ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டானது கொரோனா தாக்குதலின் அச்சத்தால் திருமழிசை மற்றும் மாதவரம் பகுதிக்கு மாற்றப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது. அதாவது திருமழிசை பகுதியில் அமைக்கப்பட்ட சந்தையில் காய்கறிகளும், மாதவரம் பகுதியில் அமைக்கப்பட்ட சந்தையில் பழங்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

மேலும், ஒவ்வொரு பகுதியிலும் 200க்கும் மேற்பட்ட கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் சுமார் 950க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது மாற்றப்பட்ட திருமழிசை மற்றும் மாதவரம் பகுதியில் வெறும் 200 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை விரைவில் திறக்கக்கோரி காய்கறி வியாபாரிகள் 200க்கும் மேற்பட்டோர் சி.எம்.டி.ஏ அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அங்குள்ள வியாபாரிகள் கூறியதாவது,  கோயம்பேடு மார்க்கெட் திறக்காததால் தங்களது வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், 3 மாதங்களாக ஊரடங்கு காரணத்தால் கடைகளில் பெரிதளவில் லாபம் ஈட்டமுடிவதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். தற்போது, சென்னையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டுமென சி.எம்.டி.ஏ அலுவல அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அங்கு 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: