எண்ணூர் ஜெஜெ நகர் பகுதியில் கொரோனா பரிசோதனையில் குளறுபடி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை: வீடுகளை தனிமைப்படுத்த எதிர்ப்பு

திருவொற்றியூர்: எண்ணூர் ஜெஜெ நகர் பகுதி மக்களுக்கு கடந்த மாதம் 30ம் தேதி சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அந்த பகுதியை சேர்ந்த 14 பேருக்கு தொற்று இருப்பதாக கூறிய அதிகாரிகள், நேற்று அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் உள்ள ஸ்கிரீனிங் சென்டருக்கு அழைத்து சென்றனர். பின்னர், மற்ற பரிசோதனைக்காக அவர்களை அமர வைத்தனர். பல மணி நேரத்துக்கு பிறகு அங்கு வந்த மருத்துவர்கள், அனைவரையும் பரிசோதித்துவிட்டு, அவர்களை வீட்டுக்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வைரஸ் தொற்று  இருப்பதாக அழைத்து வந்துவிட்டு, இப்போது வீட்டுக்கு போக சொல்கிறீர்களே என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதற்கு மருத்துவர்கள், ‘நோய் தொற்று இல்லாத உங்களை யார் இங்கு அழைத்து வந்தது,’’ என்று அவர்களிடமே கேள்வி எழுப்பினர். இதனால் என்ன செய்வது என்று தெரியாத பொதுமக்கள் அங்கிருந்த திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளிடம், ‘‘ எங்களுக்கு நோய் தொற்று இருப்பதாக நீங்கள் தானே ஆம்புலன்சில் இங்கு அழைத்து  வந்தீர்கள். தற்போது எங்களை வீட்டுக்கு போகும்படி மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது வாகன வசதி இல்லை. அதனால் மீண்டும் எங்களை நீங்கள்தான் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்,’’ என்றனர்.

ஆனால், அதிகாரிகள் அழைத்துச் செல்ல முடியாது, என்று மறுக்கவே வேறு வழியில்லாமல், எல்லையம்மன் கோயில் தெருவில் இருந்து எண்ணூருக்கு சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அவர்களில் பலர்  நடந்தே வீடு திரும்பினர்.   இதற்கிடையில், நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள், எண்ணூர் ஜேஜே நகரில் மேற்கண்ட 14 பேரின் வீடுகளை தனிமைப்படுத்த அங்கு வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘‘மேற்கண்ட 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் திருப்பி அனுப்பி விட்டனர்.

அப்படி இருக்கும் போது, ஏன் அவர்கள் வீட்டை தனிமைப்படுத்த வேண்டும்,’’ எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மாநகராட்சி அதிகாரிகள் முறையாக கொரோனா பரிசோதனை செய்வதில்லை. முன்னுக்குப் பின் முரணான முடிவுகளால் பொதுமக்களை பயமுறுத்துகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு அதிகாரிகள் எந்த உதவியும் செய்வதில்லை. அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால்  அவதிக்குள்ளாகிறோம்,’’ என்றனர்.

Related Stories: