பள்ளிகள் மூடப்பட்டதால் பெண் குழந்தைகள் தவிப்பு சானிட்டரி நாப்கின்களுக்கு திடீர் தட்டுப்பாடு: ஊரடங்கால் இளம்பெண்கள் அவதி

சென்னை: கொரோனா தொற்று காரணமாக சென்னை உட்பட பல இடங்களில் அரசால் தனிமைப்படுத்தப்பட்ட பல பெண்கள் சானிட்டரி நாப்கின் கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளனர். சில இடங்களில் கடைகளில் கூட ஸ்டாக் இல்லை. இதனால் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு நாப்கின்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் பள்ளி குழந்தைகளின் நிலை படுமோசம். தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அரசு சார்பில் வளரிளம் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. ஆனால் பள்ளிகள் மூலம் இவர்களுக்கு சானிட்டரி நாப்கின் கிடைப்பது தடைபட்டு விட்டது. ஊரடங்கால் வேலை இழந்த பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு சானிட்டரி நாப்கின் வாங்கித் தர கூட பணம் இல்லாமல் தவிக்கின்றனர்.

பொதுநல அமைப்புகள் சில இடங்களில் ஏழை பெண் குழந்தைகளுக்கு இலவசமாக நாப்கின்களை சப்ளை செய்தன. ஆனால் இது போதுமானதாக இல்லை. கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது சானிட்டரி நாப்கின் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இல்லை. பின்னர் ஆன்லைன் நிறுவனங்கள், மளிகைக் கடைகள், மருந்துக்கடைகள் ஆகியவற்றில் நாப்கின்கள் விற்றுத் தீர்ந்தன. இந்த தகவல்கள் வெளியான பிறகுதான் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சானிட்டரி நாப்கினை சேர்த்து மத்திய அரசு கடந்த மார்ச் 29ம் தேதிக்குப் பிறகு அறிவித்தது. இதன்பிறகு சானிட்டரி நாப்கினை உற்பத்தி செய்ய தொடங்குவதற்கு மேலும் நான்கைந்து நாட்கள் ஆகிவிட்டது என உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதுவும் தட்டுப்பாடு ஏற்பட ஒரு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. இந்தியாவில் வயதுக்கு வந்த சுமார் 35.5 கோடி பெண்களில் சுமார் 36 சதவீத பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகின்றனர்.

தொற்று பரவல் காலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு என்பது, பெண் குழந்தைகளின் உடல் நலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகள், குடிசைப் பகுதிகள், மற்றும் சுகாதார அமைப்புகள் மூலம் பெண் குழந்தைகளுக்கு நாப்கின் கிடைக்கச் செய்ய வேண்டும். தட்டுப்பாட்டை போக்க கடைகளுக்கு சப்ளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெண்களின் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

1 முதல் முதலாக, அமெரிக்காவை சேர்ந்த கோட்டக்ஸ் என்ற நிறுவனம் 1920ல் வணிகரீதியாக நாப்கின் விற்பனையை அறிமுகம் செய்தது.

2 1960-70களில் சற்று மேம்படுத்தப்பட்ட நாப்கின்கள் விற்பனைக்கு வந்தன.

3 இந்தியாவில் வயதுக்கு வந்த பெண்கள் எண்ணிக்கை சுமார் 35.5 கோடி.

4 சுமார் 36 சதவீத பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகின்றனர் என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

5 ஊரடங்கில் நாப்கின் அத்தியாவசிய பட்டியலில் தாமதமாக சேர்க்கப்பட்டது. இதனால் உற்பத்தி மற்றும் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

6 இந்தியாவில் சுமார் 15 சதவீத பெண்களுக்கு மட்டுமே நாப்கின் தட்டுப்பாடின்றி கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 தமிழகத்தில் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பாக சுமார் 79 சதவீத பெண்கள் அறிந்திருக்கவில்லை என 2014ல் யுனிசெப் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Stories: