செப்டம்பர் 15ம் தேதிக்குள் என்ஜினியரிங் கவுன்சலிங் முடிக்க யுஜிசி அறிவுறுத்தல்

சென்னை: பிஇ, பிடெக் நடத்தும் பொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 16ம் தேதி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்றும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கவுன்சலிங்கை செப்டம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அவற்றில் படிக்கும் மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வு, செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்து ஏஐசிடிஇ ஏற்கனவே ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருந்தது. இதன்படி ஜூலையில் நிலைமை சீர்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேலும் ஒரு மாதத்துக்கு மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் குறிப்பிட்ட நாளில் கல்லூரிகள் திறக்கப்படுவது தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான தேர்வுகள் வகுப்புகள் தொடங்குவது, கடந்த ஆண்டின் தேர்வுகளை நடத்துவது குறித்து ஏஐசிடிஇ வழிகாட்டு நேறிமுறைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று மாலை திருத்தப்பட்ட அட்டவணையை ஏஐசிடிஇ வெளியிட்டது. இதன்படி, பொறியியல் படிப்புக்கான முதற்கட்ட கவுன்சலிங்கை ஆகஸ்ட் 30ம் தேதிக்குள்ளாகவும், 2ம்கட்ட கவுன்சலிங்கை செப்டம்பர் 10ம் தேதிக்குள்ளாகவும், இறுதிக் கட்ட கவுன்சலிங்கை செப்டம்பர் 15ம் தேதிக்குள்ளாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. மேலும், பிஇ, பிடெக் படிப்பில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி வகுப்புகளை தொடங்க வேண்டும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை செப்டம்பர் 15ம் தேதி தொடங்க வேண்டும் என்றும் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

நடப்பு கல்விஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அடுத்த 2021 ஜூலை 31ம் தேதி வரை இருக்கும், பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகார நீட்டிப்பை ஜூலை 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான வகுப்புகளை ஜூலை 15ம் தேதி முதல் தொடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஏஐசிடிஇயின் வழிகாட்டுதல்களை அப்படியே பின்பற்ற முடியாது என்று தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தெரிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப வகுப்புகளை தொடங்குவது, கவுன்சலிங்கை நடத்துவது குறித்து முதல்வர்தான் இறுதி முடிவு எடுப்பார் என்றும் மாநில உயர்கல்வித்துறை சார்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் முதன்மைச் செயலாளர் அபூர்வா தெரிவித்துள்ளார்.

Related Stories: