சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு எங்கே தவறிழைத்தது? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி

சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு எங்கே தவறிழைத்தது?, எங்கே தமிழக காவல்துறை காலதாமதம் செய்தது? என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கை: சாத்தான்குளத்தில் நிகழ்ந்த தந்தை மகன் இருவரது உயிரிழப்பு சம்பவத்தில் தமிழக அரசும், காவல்துறையும் எடுத்து வரும் நடவடிக்கைகளை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசின் செயல்களுக்கு பாராட்டுகளும், மறைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது குடும்பத்தினர் தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியினையும் தெரிவித்திருக்கிறார்கள்.

 குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதோடு, வழக்கும் கொலை வழக்காக மாற்றப்பட்டு விரிவான, விரைவான விசாரணையை தமிழக காவல்துறையின் சிபிசிஐடி பிரிவு மேற்கொண்டு வருகிறது. இதனை சாத்தான்குளம் பகுதிவாழ் மக்களும் மனதார வரவேற்றிருப்பதோடு, சில இடங்களில் உணர்ச்சி பெருக்கில் பட்டாசுகளை வெடித்து இளைஞர்களும், பொதுமக்களும் தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்று பாராட்டியிருக்கிறார்கள். எந்த ஒரு குற்ற சம்பவத்தின் அடுத்த விநாடியிலேயே அதன் முழு விவரங்களும் வெளிவந்துவிடாது.

குறிப்பாக காவல் நிலையங்களில் நிகழும் மரணங்களிலும், விசாரணையின்போது நிகழும் உயிரிழப்புகளிலும், முதலில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துவிட்டு, அதன் பிறகு கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் திரட்டப்படும் செய்திகள் ஆகியவற்றைக் கொண்டே அது கொலையா, தற்கொலையா, இயற்கை மரணமா என்பது உறுதி செய்யப்படும். இதுதான் குற்றவியல் சட்ட நடைமுறை. இந்த நடைமுறைதான் சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரது மரணத்திலும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது. இதில் எங்கே தமிழக அரசு தவறிழைத்தது? எங்கே தமிழக காவல்துறை காலதாமதம் செய்தது? எங்கே முதலமைச்சர்  முரண்பாடாக பேசினார்? எங்கே நீதி மறுக்கப்பட்டது? சட்டத்தின் வழியில் தர்மத்தின் பாதையில் செங்கோல் செலுத்துகிற எங்கள் எளிமையான சாமானிய முதல்வர் எடப்பாடியின் நல்லாட்சியினை நரி சூழ்ச்சிகளால் ஒருபோதும் களங்கப்படுத்த முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: