பொதுமக்களிடம் இருந்து வீடியோகாலில் 34 புகார்கள் போலீஸ் கமிஷனர் பெற்றார்: நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: கொரோனா ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள்34 பேரிடம் இருந்து வீடியோ கால் மூலம் போலீஸ் கமிஷனர்  மகேஷ்குமார் அகர்வால் புகார்களை பெற்றார். அந்த புகாரின் படி உடனே நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். கொரோனா தடுப்பு காரணமாக பொதுமக்கள் தங்கள் குறைகளை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து புகார் அளிக்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்து புதிய போலீஸ் கமிஷனராக நேற்று முன்தினம் பதவியேற்று கொண்ட மகேஷ்குமார் அகர்வால், மக்கள் தன்னிடம் நேரடியாக வீடியோகால் மூலம் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனரை 6369100100 என்ற வாட்ஸ் அப் எண்ணில் ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை வீடியோ கால் மூலம் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை மக்கள் அறிவிக்கப்பட்ட வாட்ஸ் அப் நண்பர் மூலம் வீடியோ காலில் புகார் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஒரு மணி நேரத்தில் 34 பேரிடம் இருந்து வீடியோ கால் மூலம் நேரடியாக குறைகளை கேட்டு புகார் பெற்றார். அந்த புகார்களின் படி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். குறிப்பாக பணம் கொடுக்கல் வாங்கல், திருட்டு, நில அபகரிப்பு, ஆன்லைன் மோசடி, காசோலை மோசடி, இ-பாஸ் மற்றும் பொது ஊரடங்கு தொடர்பாக புகார்கள் இருந்ததாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். வீடியோ கால் மூலம் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்பட்ட 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஐஐடி முகாமில் ஆய்வு

சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், 11 காவலர்கள், 9 ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் நேற்று ஒரே நாளில் 25 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் ஐஐடி மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பணியாற்றிய சக போலீசாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல்துறையில் நேற்று வரை 1,250 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தொற்றால் பாதிக்கப்பட்டு ஐஐடி வளாகத்தில் சிகிச்சைப் பெற்று வரும் போலீசாரை ஐஐடி முகாமில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, இணை கமிஷனர் சுதாகர் உடனிருந்தார். பின்னர் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறுகையில், ‘பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து காவலர்களும் முகக்கவசம் அணிய வேண்டும்.  தமிழ்நாட்டில் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது’’ என்றார்.

Related Stories: