தனியார் பள்ளி கட்டணக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்: அரசாணை வெளியீடு

சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்ட கட்டண குழுவுக்கு புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்துவதற்காக 2009ல் ஒரு குழுவை அமைத்து அரசு ஆணை பிறப்பித்தது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் அதன் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக பள்ளிக்கல்வி இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர், ெதாடக்க கல்வி இயக்குநர், பொதுப்பணித்துறையை சார்ந்த அதிகாரி ஒருவர் இருப்பார்கள். மேலும், பள்ளிக் கல்வித்துறையின் கூடுதல் செயலாளர் உறுப்பினர் செயலாளராகவும் இருப்பார் என்று ஆணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் கட்டணக் குழுவின் தலைவர்கள் ஒவ்வொரு 3 ஆண்டுக்கும் ஒருவர் பணியாற்றி வந்தனர். அதில் இறுதியாக ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி, கடந்த மார்ச் 20ம் தேதிவரை பணியில் இருந்தார். அவரது பதவிக்காலம் முடிந்ததை அடுத்து கட்டண குழுவுக்கு தலைவர் நியமிக்கபடாமல் காலியாக இருந்தது.

அடுத்த கல்வி ஆண்டு தொடங்க உள்ள நிலையில் அந்த குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் மற்றும் சிறப்பு அதிகாரியின் உத்தரவின் பேரில் தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.பால சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தனியார் பள்ளிகளுக்கான கட்டண குழுவின் தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பார்.

Related Stories: