குமரி உள்ளாட்சி அமைப்புகளில் வாங்கிய பிளீச்சிங் பவுடர் ‘சாயம்’ வெளுத்துபோச்சு.. கிருமிநாசினிக்கு தரமற்றது என ஆய்வு அறிக்கையில் அம்பலம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பல இடங்களில் சாலையோரங்களிலும், குடிநீர் தொட்டிகளிலும் தரமற்ற பிளீச்சிங் பவுடர் தூவியதில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அதனை தடுக்க  கருவிகள், பொருட்கள் வாங்குவதில் முறைகேடுகள் அம்பலமாகி வருகிறது. ‘ரேபிட் கிட்’ வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள், முக கவசம் வாங்கியதில் முறைகேடுகள், ‘தெர்மல் ஸ்கேனர்’ வாங்கியதில் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் தற்போது பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் லட்சக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

நோய் பரவும் காலங்களில் குடிநீரால் பொதுமக்களுக்கு வயிற்றுபோக்கு போன்றவை ஏற்படாமல் தடுக்க குடிநீரில் குளோரின் அளவு பரிசோதிக்கப்படும். மழைக்காலங்களில் குடிநீரில் குளோரின் அளவு குறைவாக காணப்படும் என்பதால் கிணறுகளில், குடிநீர் தொட்டிகளில் பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தப்படும். 33 அல்லது 32 சதவீதம் குளோரின் உள்ள பிளீச்சிங் பவுடர் மட்டுமே இதற்கு பயன்படுத்த வேண்டும். குடிநீர் தொட்டிகளில் கொள்ளளவு அடிப்படையில் சரியாக 1000 லிட்டருக்கு 4.2 கிராம் என்ற அளவில் குளோரின் சேர்க்க வேண்டும். குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என்பது குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் பரிசோதித்து அதன் அறிக்கையை பெற வேண்டும். பொதுவாக குடிநீரில் குளோரின் அளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 2 பிபிஎம் இருக்க வேண்டும். தெரு, வீட்டு குழாய்களில் 0.5 பிபிஎம் இருக்க வேண்டும் என்பது நியதி ஆகும்.

ஆனால் கொரோனாவையொட்டி குமரி மாவட்டத்தில் பிளீச்சிங் பவுடர் பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டு வருகிறது. குறிப்பாக நெல்லையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து அதிக அளவில் வாங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் பிளீச்சிங் பவுடர் மற்றும் அது சார்ந்த கிருமிநாசினிகளை சப்ளை செய்துள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட கிருமிநாசினிகளில் பிளீச்சிங் பவுடர் தரமானது இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. பிளீச்சிங் பவுடர் தரம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இதனை நெல்லையில் உள்ள பொதுசுகாதார நீர் பகுப்பாய்வு சோதனை கூடத்தில் மாதிரிகளை வழங்கி பரிசோதித்து பார்த்துள்ளனர்.

அப்போது ஏப்ரல் மாதம் தயாரிக்கப்பட்ட அந்த தனியார் நிறுவன பிளீச்சிங் பவுடரில்  32 சதவீதம் குளோரின் இருப்பதற்கு பதிலாக 20 சதவீதம் மட்டுமே குளோரின் இருந்துள்ளது. மேலும் இது குடிநீருக்கு பயன்படுத்த தகுதியற்றது எனவும், குடிநீரில் உள்ள நோய்க்கிருமிகளை கொல்வதற்கு இது கிருமிநாசினியாக பயன்படுத்த இயலாது  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்தரம் மற்றும் இரண்டாம் தரம் என்று பிஐஎஸ் தர நிர்ணய அடிப்படையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெருவோரங்களிலும், கழிவுநீரோடை போன்ற பகுதிகளில் தூவப்படுகின்ற பிளீச்சிங் பவுடரில் குளோரின் அளவு 1.7 சதவீதம் மட்டுமே இருந்துள்ளது.  இதுவும் கிருமிநாசினியாக பயன்படுத்த இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை போன்று கொசுமருந்தாக பயன்படுத்தப்படும் திரவமும் தரமானது இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 20 கிலோ சுண்ணாம்பு கழிவு தூளில் 5 கிலோ மட்டும் பிளீச்சிங் பவுடரை கலந்து விநியோகம் செய்தால் மட்டுமே இதுபோன்று வரும் என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இதனையே டன் கணக்கில் குமரி மாவட்டத்தில் கொள்முதல் செய்து அதனுடன் மேலும் சுண்ணாம்பு பொருட்களை கலந்து சாலையோரங்களில் வீசியுள்ளனர். மேலும் அதனை தண்ணீரில் கரைத்து கொரோனா தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் தெளித்து வருகின்றனர். இதில் லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

குமரி மாவட்டத்தில் திருச்சியில் உள்ள கூட்டுறவு நிறுவனத்திடம் இருந்து ஒரு சில உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்யப்பட்டுள்ள போதிலும் நெல்லையில் இருந்து பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்வதில் சில உள்ளாட்சி அமைப்புகள் ஆர்வம்காட்டி அவற்றை வாங்கி வைத்துள்ளனர். இந்த பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தியதால் கிருமிநாசினியாக எந்த பலனும் ஏற்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எந்தவித ஒப்பந்த புள்ளியும்  இல்லாமல் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தனியாக கொள்முதல் செய்துகொள்ளலாம்  என்பதால் பிளீச்சிங் பவுடர் நிறுவனங்களிடம் இருந்து டன் கணக்கில் பொருட்களை  வரவழைத்துள்ளனர்.

 உயர் அதிகாரிகளுக்கு கமிஷன், சம்பந்தப்பட்ட  அமைப்புகளுக்கு தனி கமிஷன் என்று டூப்ளிகேட் பிளீச்சிங் பவுடரிலும்  லட்சக்கணக்கில் ஊழல் நடந்துள்ள போதிலும் உயர் அதிகாரிகள் இதனை  கண்டுகொள்ளவில்லை. எனவே குமரி மாவட்ட நிர்வாகம் இது  தொடர்பாக உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தடை செய்யப்பட்ட நிறுவனம்

நெல்லையில் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்ட நிறுவனம் தரமற்ற பிளீச்சிங் பவுடர் சப்ளை செய்வதாக கூறி அம்மாவட்ட நிர்வாகத்தால் ஏற்கனவே தடை செய்யப்பட்ட நிறுவனம் என்று கூறப்படுகிறது. தற்போது குஜராத், மத்திய பிரதேசம் போன்ற பகுதிகளில் உள்ள பிளீச்சிங் பவுடர் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களை கொண்டு போலியாக கவர்கள் அச்சடித்து அவற்றில் சுண்ணாம்பு கழிவு பொருட்களில் பிளீச்சிங் பவுடர் கலந்து மாற்றி டன் கணக்கில் சப்ளை செய்வதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு சப்ளை செய்யப்பட்ட பொருட்களில் இருந்து மாதிரிகள் சேகரித்து அவை தரமற்றது என்று கண்டறியப்பட்டபோதிலும் தற்போது பயன்படுத்தப்பட்ட பொருட்களால் என்ன பயன் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பற்றாக்குறையை  சாதகமாக பயன்படுத்தினர்

கொரோனா நோய் தொற்றை தடுக்க பிளீச்சிங் பவுடர் கரைத்து தெளிக்கும் கிருமிநாசினி சுரங்கபாதை அமைக்கப்பட்டது. இது பல இடங்களிலும் ஏற்படுத்தப்பட்ட நிலையில் ஐசிஎம்ஆர் இதனால் எந்த பலனும் இல்லை என்று கூறிவிட்டது. அதன் பின்னர் பிளீச்சிங் பவுடர் பெரும்பாலும் சாலையோரங்களில் தூவப்படுகிறது. தண்ணீர் தொட்டிகளிலும் கலக்கப்படுகிறது. ஆனால் ஒரே நேரத்தில் தேவை அதிகரித்ததால் பல நிறுவனங்களிலும் இருப்பு இல்லாத நிலையும், கடும் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி சுண்ணாம்பு கழிவுகள் போன்றவற்றில் பிளீச்சிங் பவுடரை கலந்து இதுதான் பிளீச்சிங் பவுடர் என்ற அடிப்படையில் நிறுவனங்கள் சில விற்பனையை தொடங்கின. தற்போது கொள்முதல் விலை கிலோ 60 வரை உள்ளது. இவ்வாறு ஒரு மூடை பிளீச்சிங் பவுடரை வாங்கி அதனை சுண்ணாம்புடன் கலந்து 25 மூடைகொண்ட பொருளாக மாற்றி விற்பனை செய்கின்றனர்.

Related Stories: