ஆபத்தின் பிடியிலிருந்து மீள வழி கிடைக்குமா? ஊரடங்கால் சிகிச்சை பெற வழியில்லை புற்றுநோய் சிறுவர்களின் பரிதாப நிலை: ரத்த வங்கிகள் காலி

சென்னை: துள்ளித்திரியும் வயது. ஆனாலும், புற்றுநோய் பாதிப்பால் மருத்துவமனைக்கு அலையாய் அலையவேண்டிய நிலை. சிறுவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் அவ்வளவு ஆபத்தானது அல்ல. ஆனாலும், கொரோனா ஊரடங்கு ஒரு வகையில் அவர்களுக்கு ஆபத்தானதாகவே அமைந்துவிட்டது. கிராமங்களில் இருக்கும் பெற்றோர் கூட புற்றுநோய் பாதித்த தங்கள் குழந்தையை நகரங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கின்றனர். படிப்பில் தடை… பணம் தண்ணீராய் செலவழிகிறது. பல லட்சம் செலவு செய்து தங்கள் சேமிப்பு பணம் முழுவதையும் குழந்தையின் கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைக்காக செலவு செய்கின்றனர். இது முடிந்ததும் மருந்து மாத்திரை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை அளித்தால் குழந்தைகள் புற்று நோய் பாதிப்பில் இருந்து எளிதாக விடுபட்டு விடுவார்கள். ஆனால், ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு வகையில் கடுமையான பாதிப்புக்கு‌ ஆளாக்கிய ஊரடங்கு குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. ஊரடங்கால் பலர் தங்கள் குழந்தைகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல இயலவில்லை. ஆண்டுதோறும் தவறாமல் செய்ய வேண்டிய மருத்துவ சோதனைகள் விடுபட்டுப் போய்விட்டது.  மருந்து மாத்திரை வாங்க முடியவில்லை. ஒருசிலர் சிகிச்சைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு போக முடியாமல் தவிக்கின்றனர். நகரங்களில் வசித்தாலும் கூட, கொரோனா நோயாளிகள் வருவதால் குழந்தைகளை மருத்துவமனைகளில் அட்மிஷன் போடுவதில்லை.

இந்தியாவில் புற்றுநோய் பாதித்த சிறுவர்கள் 50,000 பேர் என சில புள்ளி விவரங்கள் கூறினாலும், உண்மையில் இந்த எண்ணிக்கை 75 ஆயிரமாக இருக்க வாய்ப்புள்ளது என ஆய்வு நடத்திய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இவ்வளவு குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தும் கூட, இந்தியாவில் குழந்தைகளுக்கான சிறப்பு புற்றுநோய் மையங்கள் எண்ணிக்கை 8 - 10 மட்டுமே. இவற்றில் பெரும்பாலானவை பெரிய நகரங்களில் தான் இருக்கின்றன. உதாரணமாக, மும்பையில் உள்ள  டாடா நினைவு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெறும் குழந்தைகளில் 43% பேர் சிகிச்சைக்காக 1,300 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய அவலம் உள்ளது என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஊரடங்கால் சிறுவர் புற்றுநோய் பாதிப்பு குறித்து குழந்தைகள் புற்றுநோய் மருத்துவர் ஒருவர் கூறுகையில், “குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்கு ஏழைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதோடு, ஊரடங்கால் பெரும்பாலான மருத்துவமனைகளில் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது.

இந்த நிலை மாற வேண்டும். மருத்துவமனைகளில் இதற்காக சிறப்பு படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் புற்றுநோய் ஆபத்தானதல்ல. சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்திவிட முடியும். ஆனால், பண வசதி மற்றும் சிகிச்சை வசதி இன்றி பாதியிலேயே விட்டு விடுகின்றனர். இது இறப்புக்கு காரணமாகி விடுகிறது. இப்படி சிகிச்சையை பாதியிலேயே விடும் அவல நிலை ஊரடங்கால் ஏற்பட்டிருக்கிறது பரிதாபத்துக்குரியது,” என்றார். மற்றொரு மருத்துவர் ஒருவர் கூறுகையில், “எங்கள் மருத்துவமனையில் குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைக்காக மார்ச் துவக்கத்தில் பதிவு செய்தவர்கள் ஊரடங்கால் மருத்துவமனைக்கு வர இயலவில்லை. சிலரை தொலைபேசியில் ஆலோசனை கேட்க கூறியுள்ளோம். ஆனால் அவசர சிகிச்சைக்கு என்ன செய்வது? என்றார்.

Related Stories: