சைதாப்பேட்டை காய்ச்சல் முகாமில் ஆய்வு முழு ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவல் குறைவு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் தெருவில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: ஊரடங்கு காலத்தை சரியாகப் பயன்படுத்தி நாளொன்றுக்கு 550 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது. நேற்று மட்டும் 34,880 பேர் இந்த முகாமை பயன்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக இந்த ஊரடங்கு நேரத்தில், சென்னை, மதுரை போன்ற பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக காய்ச்சல் முகாம்கள் நடத்தவும், ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் கூட சோதனை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தெருத்தெருவாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதுவரை 10 ஆயிரத்து 327 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 6 லட்சத்து 74 ஆயிரம் பேர் இந்த முகாம்களை பயன்படுத்தி உள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஊடகங்கள் உதவ வேண்டும். முதியவர்களுக்கு ஆக்சிஜன் அளவு கணக்கிடப்படுகிறது. வைட்டமின் சி சத்துள்ள உணவுகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பு மருந்துகளை பொறுத்தவரையில் தேசிய அளவில் தடுப்பு மருந்து ஆராய்ச்சி சென்றுகொண்டிருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பிளாஸ்மா சிகிச்சை சிறந்த முறையில் நடைபெறுகிறது. ஐசிஎம்ஆர் அனுமதி பெற்று நடத்தப்படுகிறது. முறையான அனுமதி பெற்று மற்றொருபுறம் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா என்பது ஒருவகை நுண்கிருமி. பொதுமக்கள் அதிகம் பயம் கொள்ள வேண்டாம். முழு ஊரடங்கு காலம் பயன் தந்துள்ளது. பொதுமக்கள் வெளியே அதிகம் செல்லாத நேரங்களில், பரவல் குறைந்துள்ளது. அதே வேளையில் சோதனைகளையும் அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கண்ணகி நகர் போன்ற இடங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அப்பகுதி மக்கள் முழுமையாக பின்பற்றுகிறார். அதே போல் மற்ற பகுதிகளிலும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: