கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மருத்துவ கல்லூரி கட்டுமான பணி: அச்சத்தில் தொழிலாளர்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவ கல்லூரி கட்டிடப் பணிகள், சமூக இடைவெளியின்றியும், முக கவசம், கையுறை, கிருமிநாசினி எதுவும் இன்றி நடந்து வருவதால், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு நிதியை ஒதுக்கியுள்ளது. அதேபோல், மத்திய அரசும் முதற்கட்ட நிதியை ஒதுக்கியுள்ளது. அதற்கு பிறகு அனுமதி கிடைத்த மருத்துவ கல்லூரிகளையும் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அனுமதி கிடைத்த மருத்துவ கல்லூரிகளை கட்டுவதற்கு  தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், மருத்துவ கல்லூரி, குடியிருப்பு பகுதிகள் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது. 18 மாதங்களில் கட்டி முடிப்பதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணிக்கான அடித்தளம் அமைக்கும் பணி திருவள்ளூரில் நடந்து வருகிறது. இந்த பணிகளில் உள்ளூர் தொழிலாளர்களுடன், வெளிமாநில பணியாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கட்டுமான பணிகள் நடக்கும் பகுதிகளிலேயே தங்க வைக்கப்பட்டு, உணவு, தங்கும் இடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

கட்டுமான பணிகள் நடக்கும் பகுதியில் தங்கி இருக்கும் வெளி மாநில பணியாளர்கள் அந்த பகுதியில் இருந்து வெளி இடங்களுக்கு செல்லக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக வெளிமாநில பணியாளர்கள் தினசரி காலை மற்றும் மாலை இரண்டு வேளை குளிக்க வேண்டும். தங்கி இருக்கும் பகுதியை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். தேவைப்படும் வெளிமாநில பணியாளர்களுக்கு தினசரி உடல் வெப்பநிலை கணக்கிடப்பட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை முறையாக கழுவ வேண்டும். மருத்துவ தேவை ஏற்பட்டால் அதற்கு வேண்டிய வசதிகளும் செய்து தரப்பட வேண்டும். வெளிமாநில பணியாளர்களை கண்காணிக்க அதிகாரிகள் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட வேண்டும் என பொதுப்பணி துறை அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

ஆனால், திருவள்ளூரில் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை செய்து வரும் தொழிலாளர்களுக்கு இதுவரை கிருமிநாசினி, கைகளை கழுவ சோப், முககவசம், கையுறை என எதையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்கவில்லை. இவ்வாறு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், சமூக இடைவெளியும் இல்லாமல் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கல்லூரி கட்டுமான பணியில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், தொழிலாளர்களுக்கு எளிதில் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கட்டுமான பணிகளிலும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே கட்டுமான தொழிலாளர்கள் நலன்கருதி, முககவசம், கையுறை, கிருமிநாசினி ஆகியவற்றை முறையாக வழங்க பொதுப்பணி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: