நோய்தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று மக்கள் பீதி அடைய வேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை:  தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை எழிலகத்தில் நேற்று அளித்த பேட்டி: கொரோனா வைரஸை ஒழித்து மக்களிடம் நல்ல பெயரை வாங்கி விட்டால், இந்த மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குரியவராக முதல்வர் மாறி விடுவார் என்பதால்தான் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிடுகின்றனர். முதல் ஊரடங்கிற்கு முன்பே 2 கோடியே 1 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 35 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதன்முறையாக ஆயிரம், இரண்டாவது முறையாக ஆயிரம் ரூபாய், அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்கப்பட்டது. அம்மா உணவகத்தில் தினந்தோறும் 7 லட்சம் பேருக்கு விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டது.

நோய் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்ற அச்சமும், பீதியும் மக்களுக்கு தேவையில்லை. தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாடுகளிலும் 4 மாதங்கள், 5 மாதங்கள் உச்சத்தில் சென்ற பிறகுதான் படிப்படியாக குறைகிறது என்ற ஆய்வை தான் நாம் பார்த்து இருக்கிறோம். அந்த அனுபவத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆனாலும் இந்த நோய் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அவர்களை குணப்படுத்துகின்ற போது, 100 சதவீதம் இறப்பை குறைக்க முடியும். இந்த ஆய்வின் அடிப்படையில் இந்தியாவிலேயே, உலகத்திலேயே இறப்பு விகிதம் தமிழகத்தில் மிக, மிக குறைவாக உள்ளது. இதற்கு காரணம், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தது தான். இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை தமிழகத்தில்தான் செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் குணமடைந்து சென்றடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* பாரத் நெட் திட்டத்துக்கு மறு டெண்டர் விடப்படும்

அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டியில், “பாரத் நெட் திட்டத்துக்காக தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் 2019 டிசம்பர் 5ம் தேதி அன்று வலைதளம் மூலமாக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. ஒப்பந்த புள்ளி முடிப்பதற்கான பணிகள் முடிவடைவதற்குள் மத்திய அரசின் கீழ் இயங்கும் இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சென்னையில் உள்ள அறப்போர் இயக்கம், டான்பி நெட் கோரிய ஒப்பந்த புள்ளியில் மேக் இன் இந்தியா விதிமுறைகளின் கீழ் இந்திய ஒப்பந்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை என தெரிவித்து மத்திய அரசு டெண்டரை ரத்து செய்தது. இதை தொடர்ந்து, உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகத்துறை, இந்த விவகாரத்தில் கடந்த 23ம் தேதி விசாரணை நடத்தியது.இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் ஒப்பந்த புள்ளியில் மத்திய அரசின் வழிகாட்டுதல் கடைபிடிக்கப்படும். தற்போது மறு டெண்டருக்கான உத்தரவு வரப்பெற்றுள்ளதாகவும், இதில் மேக் இன் இந்தியா திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்திய உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்றனர்.

Related Stories: