சென்னையில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு: திருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு தொற்று உறுதி!

சென்னை: திருவேற்காடு நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய சூழலில் மாநகராட்சி ஆணையருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவேற்காடு நகராட்சியில் தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. ஒருநாளைக்கு 10 பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வரை 277 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவேற்காடு நகராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை நகராட்சி பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏனெனில் அவர்கள் களப்பணியாளர்கள் என்பதால் நோய் தொற்று எளிதில் பரவும் காரணத்தால் பரிசோதனை செய்யப்படுகிறது. இன்றைய தினம் திருவேற்காட்டில் 12 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சியில் பணியாற்றக்கூடிய நகராட்சி ஆணையர் செந்தில்குமாருக்கு கொரோனா அறிகுறி இருந்ததன் காரணமாக அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தற்போது சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருடன் பணியாற்றிய நகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை செய்யப்பட்டு, அவருடன் நெருக்கமாக இருந்த ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து நகராட்சி அலுவலகம் தூய்மை செய்யப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related Stories: