லடாக் மோதலை தொடர்ந்து டிக்டாக், ஹலோ உட்பட 59 சீன ஆப்களுக்கு தடை

புதுடெல்லி : டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உட்பட 59 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது. லடாக் எல்லையில் நடந்த மோதலைத் தொடர்ந்து, இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி இந்திய, சீன ராணுவ வீரர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்க முயற்சித்த சீனா மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் சீனா பொருட்களை தவிர்ப்பது, சீன ஆப்களை மொபைலில் இருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகள் மக்கள் தாங்களாகவே முன்வந்து செய்கின்றனர்.

இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற டிக் டாக், ஹலோ, ஷேர் இட் உட்பட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்தது. இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பம் துறை விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டை சேர்ந்த சில மொபைல் ஆப்கள், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி முறைகேடு செய்வதாக பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுபோன்ற தகவல் திருட்டுகள் தேச பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்திடும். எனவே நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, தேச பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கினை கருத்தில் கொண்டு 59 ஆப்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2009ன் பிரிவு 69ஏவின் கீழ், அதிகரித்து வரும் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் டிக்டாக், ஹலோ பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

*  கடந்த ஏப்ரலில் இந்தியாவில் டிக்டாக் பதிவிறக்கத்தின் எண்ணிக்கை 200 கோடியை தொட்டது.

*  150 கோடியில் இருந்து 200 கோடி பதிவிறக்கங்கள் இலக்கு வெறும் 6 மாதத்தில் எட்டப்பட்டுள்ளது.

*  டிக்டாக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில் அதை உருவாக்கிய சீனாவையே முந்திக் கொண்டு இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இதெல்லாம் இனி கிடையாது

* டிக்டாக்

*  ஷேர் இட்

* யூசி பிரவுசர்

*  ஹலோ

*  லைக்

* வீசேட்

* எம்ஐ வீடியோ கால்  ஜியாமி

* வீஷின்க்

* எம்ஐ கம்யூனிட்டி

* வைரஸ் கிளீனர்

* வைபோ

* கேம் ஸ்கேனர்

* ஸ்வீட் செல்பீ

* வீமேட்

Related Stories: