கொரோனா அறிகுறிகள் தென்படுவோருக்கு உதவ ஆட்டோ சேவை: சென்னை மாநகராட்சி அறிமுகம்!

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தவே தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய வீட்டிலிருந்து ஆட்டோ மூலம் அழைத்து வந்து பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் வீட்டிலேயே வந்து விடும் சேவையை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. சென்னை அடையாறு மண்டலத்தில் 13 வார்டுகள் உள்ளன. இங்கு 1300 தொண்டு நிறுவன முன்கள பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாக சென்று மக்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வரும் இவர்கள், மருத்துவ பரிசோதனை செய்யவேண்டிய தேவை உள்ளவர்கள் பற்றி சென்னை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கின்றார்கள்.

 இந்த தகவலை அடுத்து, ஆட்டோவில் அழைத்து சென்று பரிசோதனை முடிந்த பின்னர், மீண்டும் வீட்டுக்கு வந்து விடும் சேவையை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. ஒரு வார்டுக்கு 2 ஆட்டோக்கள் மூலம் அடையாறு மண்டலத்தில் உள்ள 13 வார்டுக்கும் 26 ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்து இந்த சேவையை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆட்டோவுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுப்பதோடு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு உடைகளை மாநகராட்சி தந்திருக்கிறது. தொடர்ந்து, அடையாறில் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவ முகாம் நடக்கும் இடத்திலேயே கொரோனா பரிசோதனையும் செய்ய வேண்டும் என கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

Related Stories: