ஊழியர்களுக்கு அதிகரிக்கும் கொரோனா தொற்று டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் தயக்கம்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால் கடைகளில் நேரடி ஆய்வு செய்ய அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக 5 கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தநிலையில், கடந்த மாதம் 16ம் தேதி சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடித்தல், மாஸ்க், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இருந்தாலும் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. குடிமகன்கள் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மதுவாங்க வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த சில நாட்களாகவே டாஸ்மாக் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. 30க்கும் மேற்பட்ட கடை பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு மாவட்டகளில் கடை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால் ஆய்வு நடவடிக்கைகளில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து டாஸ்மாக் வட்டாரம் தரப்பில் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வைத்து மதுவிற்பனை செய்வது என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை தடுக்க டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படையினர் தினம்தோறும் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால் அதிகாரிகள் பலரும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதேபோல், ஆய்வு நடவடிக்கைகளை நிர்வாகத்திற்கு அனுப்பும் பணியும் தாமதமாகியுள்ளது. இதனால், கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு பணிகளில் தயக்கம் காட்டாமல் தகுந்த கொரோனா தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு கூறினர்.

Related Stories: