முழு ஊரடங்கால் இறைச்சி, மீன் கடைகள் அடைப்பு இருக்கவே இருக்கு கருவாடு.. ஒருபிடி பிடிச்ச அசைவபிரியர்கள்: பாக்கெட் கருவாடுக்கும் தட்டுப்பாடு வந்தாச்சு

சென்னை: ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கை ஒட்டி, இறைச்சி மற்றும் மீன் கடைகள் அடைக்கப்பட்டதால் அசைவ பிரியர்கள் கருவாட்டுக்கு மாறி உள்ளனர். முன்னதாகவே, சிறு சிறு கடைகள் முதற்கொண்டு தேடி பிடித்து கருவாட்டை வாங்கி விடுமுறையான நேற்று தங்களது விருப்ப உணவாக மாற்றிக்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை என்றாலே இறைச்சி கடைகளில் ஏராளமான மக்கள் கூடுவர். இதேபோல் மீன் கடைகளிலும் அசைவ பிரியர்கள் கூடுவது வழக்கம். இவ்வாறு அசைவ பிரியர்கள் ஒரே இடத்தில் சமூக இடைவெளி இன்றி கூடுவதால், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதையடுத்து தொற்று பரவாமல் தடுக்க இறைச்சி மற்றும் மீன் கடைகளை ஊரடங்கு நேரத்தில் மூட உத்தரவிடப்பட்டது. எனினும், அசைவ பிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், மீன் மற்றும் இறைச்சி கடைகள் இயங்கி வந்தன. வாராவாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கடந்த 19ம் தேதி முதல் மீண்டும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு உத்தரவின்போது மீன், இறைச்சி கடைகள் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மீன், இறைச்சி விற்பனை அறவே தடைபட்டது. இது அசைவ பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊரடங்கால் முட்டை மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் அளித்தது.இதனால், அசைவ பிரியர்களின் கவனம் தற்போது கருவாடு பக்கம் திரும்பியுள்ளது. சிறிய மளிகை கடைகளை தேடி தேடி அலைந்து பாக்கெட் கருவாடுகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டனர். நேற்று விடுமுறை என்றாலும் இறைச்சி, மீனுக்கு மாற்றாக கருவாட்டுக் குழம்பு சமைத்து சாப்பாட்டை ஒருபிடி பிடித்தனர். இதனால், இப்போது கடைகளில் ₹10க்கு விற்கப்படும் பாக்கெட் கருவாடுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Related Stories: