தமிழகத்தில்தான் அதிக கொரோனா பரிசோதனை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

சேலம்: நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் தலைவாசலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தலைவாசலில் கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி மையம் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இத்திட்டம் மூலம் நாட்டின மாடுகள், நாட்டு நாய் இனங்கள், நாட்டு கோழி இனங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படும்.

கொரோனா வைரஸ் ஒருவருக்கொருவர் எப்படி பரவுகிறது என தெரியாததால், இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, 3 மாத காலமாக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனையை செய்துள்ளோம். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைபடி, சரியான முறையில் நடவடிக்கை எடுத்து இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தான் இறப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ரிசர்வ் வங்கியானது, அர்பன் வங்கியை தான் எடுத்துக் கொண்டுள்ளனர். மற்ற வங்கிகளை எடுக்கவில்லை. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

* ஊரடங்கு பற்றி இன்று முடிவு

‘தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக நாளைய தினம் (இன்று) மருத்துவ நிபுணர்கள், வல்லுர்கள் குழு கூட்டம் இருக்கிறது. அதில், அவர்கள் வழங்கும் ஆலோசனையை பொருத்து அரசு முடிவு செய்து அறிவிக்கும்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories: