அபாயம்... மிக அருகில்... கொரோனா வைரஸ்... உஷார்...: லேசான அறிகுறியுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 33,000 படுக்கைகளுடன் கோவிட் கேர் மையங்கள் அமைப்பு

சென்னை: லேசான அறிகுறியுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 33 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கோவிட் கேர் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் பணியில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து மாநகராட்சி சார்பில் லேசான அறிகுறியுடன் உள்ள கோவிட் கேர் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் கொரோனா தொற்று உள்ளவர்கள் 4 பிரிவுகளாக பிரித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூச்சு திணறல் போன்ற பிரச்னைகள் இருந்தால் அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ கண்காணிப்பு தேவை என்பவர்களுக்கு சுகாதாரத்துறை கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு கோவிட் கேர் மையங்களிலும், எந்த வித அறிகுறியும் இல்லாதவர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தியும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன்படி லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு 33 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் கேர் மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது 55 மையங்களில் 17 ஆயிரத்து 500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர்த்து இரண்டாவது வகையாக அத்திப்பட்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 4200 படுக்கையும், சென்னை மாநகராட்சி திருமண மண்டபங்களில் 1360 படுக்கை உள்ளிட்ட 5560 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுவருகிறது.  மூன்றாவது வகையாக சென்னை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ஆயிரத்து 844 படுக்கைகள் தயார் செய்யப்படவுள்ளன. தற்போது வரையில் 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ள நிலையில் மீதம் உள்ள படுக்கைகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: