கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து இன்று மாலை முதல்வர் அறிவிக்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாளையுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 1ம் தேதியில் இருந்து 31ம் தேதிவரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளையுடன் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. கடந்த 96 நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த போதும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தளர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மக்கள் வீடுகளிலேயே மீண்டும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதேபோன்று மதுரை மாவட்டத்திலும் கடந்த 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களிலும் நேற்று எந்த தளர்வுகளும் இல்லாமல், அதாவது ஒரு கடைகள் கூட திறக்கப்படாமல் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கடந்த 24ம் தேதி அறிவித்தார். அப்படியே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் 30ம் தேதியுடன் (நாளை) முடிவடைகிறது. இதனால், தமிழகத்தில் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்டு மீண்டும் சகஜநிலை திரும்புமா அல்லது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, என்னென்ன தளர்வுகள் கிடைக்கும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு

அதிகரித்து வரும் சூழலில் தற்போது ஊரடங்கை தளர்த்தினால், கொத்து, கொத்தாக மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக  கூறப்படுகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் ஜூலை மத்தியில் 2.75 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலை நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, ஊரடங்கை நீட்டித்தால் மட்டுமே பாதிப்பை குறைக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் கடந்த 24ம் தேதி முதல்வர் எடப்பாடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர்கள் பல்வேறு கருத்துக்களை அரசுக்கு தெரிவித்துள்ளனர். இதில் பங்கேற்ற கலெக்டர்கள் பலரும் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். இன்னும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை கைவிடுவதா என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. தினசரி அதன் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இது தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கை முடித்துக்கொள்ள முடியாது. மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மத்திய அரசும் ரயில் போக்குவரத்தை ஜூலை 15ம் தேதி வரை ரத்து செய்துள்ளது. அதனால், தமிழகத்திலும் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றே சுகாதாரத்துறை சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். அந்த குழுவும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றுதான் பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனாலும், முழு ஊரடங்கு என்று இல்லாமல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தமிழகத்தில் மேலும் நீட்டிக்கப்படும்” என்றார்.

இதற்கிடையே, தமிழக வணிகர்கள் சங்கம், ஜூலை 1ம் தேதியுடன் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. கடந்த 26ம் தேதி திருச்சியில் பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடியும், 29ம் தேதி (இன்று) மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். மேலும் மத்திய அரசு என்ன ஆலோசனை வழங்குகிறது என்பதை பொறுத்து தமிழகத்தில் ஊரடங்கு அறிவிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று கூறினார். அதனால் தமிழக அரசு என்ன முடிவு அறிவிக்க உள்ளது என்பது குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வமாக தெரியவரும். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டாலும், இது தொடர்பாக பொதுமக்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்கள் ஒரே நேரத்தில் காய்கறி, மளிகை கடைகளில் குவியும் பட்சத்தில் மேலும், கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவது பற்றி அறிவிக்கப்பட்டால் அதற்கு போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் கடைகளில் குவிந்து கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பாக அமைந்துவிடும்.

* தமிழகத்தில் ஜூலை மத்தியில் 2.75 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* ஊரடங்கை நீட்டித்தால் மட்டுமே பாதிப்பை குறைக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் இ-பாஸ் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.

Related Stories: