கிராமங்களுக்கு கேபிள் பதிக்கும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான பாரத்நெட் டெண்டர் ரத்து: தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

சென்னை: கிராமங்களுக்கு இன்டர்நெட் வழித்தடம் அமைப்பதற்கான சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டரை ரத்து செய்து பாரபட்சமில்லாமல் புதிதாக டெண்டரை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், மத்திய தொலைதொடர்பு துறைக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களுக்கு ஏரியல் வழித்தடம், பாதாள வழித்தடம் உள்ளிட்ட வழிகளில் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு கடந்த 2019 டிசம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. திட்டத்தின் மதிப்பீடு ரூ.1950 கோடி என நிர்ணயிக்கப்பட்டது.

 டெண்டரில் கலந்துகொண்ட பெரும்பாலான நிறுவனங்களை விலக்கிவிட்டு, குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் பரவத் தொடங்கிய டிசம்பர் மாதத்தில் அதில் கவனம் செலுத்தாமல் குறிப்பிட்ட இரு நிறுவனங்களை தேர்வு செய்யும் நோக்குடன், விதிகளை மாற்றம் செய்வதில் அரசு கவனம் செலுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இதையடுத்து திமுக அமைப்பு செயலாளர் இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்த டெண்டர் முறைகேட்டில் முதல்வர், துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த வழக்கு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், பைபர் ஆப்டிக் கேபிள் டெண்டரில் ஏ,பி,சி,டி என்ற 4 பேக்கேஜ்களில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், இதில் சில குறிப்பிட்ட பெரிய நிறுவனங்கள் மட்டுமே பாரபட்சமான முறையில் பங்குபெறும் வகையில் நிபந்தனைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர், தலைமை செயலாளர், டான்பிட், மத்திய அரசின் தொலைதொடர்பு துறை, தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் வர்த்தக மேம்பாடு துறை, மத்திய சிபிஐ, காம்படிசன் கமிஷனர் ஆகியவற்றுக்கு அறப்போர் இயக்கம் புகார் அனுப்பியது. அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின்மீது மத்திய அரசின் தொலைதொடர்பு துறையும், தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் வர்த்தக மேம்பாடு துறையும் விசாரணையை தொடங்கியது. விசாரணை முடியும்வரை டெண்டர் முடிவை அறிவிக்க கூடாது என்று ஏற்கனவே இந்த துறைகள் உத்தரவிட்டிருந்தன. கடந்த 23ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

இதுகுறித்து, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது: அறப்போர் இயக்கத்தின் சார்பில் டெண்டர் நிபந்தனைகள் எப்படி மத்திய புலனாய்வு விதிகளை மீறியுள்ளது என்பது குறித்து விசாரணையின்போது விளக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட விளக்கம் மற்றும் காரணங்கள் சட்டப்படி செல்லாது என்றும் அறப்போர் இயக்கம் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, டான்பிட் இயக்குநர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆனால், அவர்களால் இந்த பாரபட்சமான டெண்டர் மாற்றங்களுக்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்து சரியாக விளக்க முடியவில்லை.

விசாரணையின்போது, அறப்போர் இயக்கத்தின் புகாரில் கூறப்பட்டுள்ள டெண்டர் நிபந்தனை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வர்த்தகம், அனுபவம் போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டதால் போட்டி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைதொடர்பு துறை இணை செயலாளர் தெரிவித்தார். தமிழக அரசுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டும் அவர்களால்  டெண்டர் விதிகள் நிபந்தனை மாற்றம் குறித்து தெளிவான பதில் தர முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 26) தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் வர்த்தக மேம்பாடு துறை தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த டெண்டரை ரத்து செய்வதையும், புதிய டெண்டர் அறிவிக்கும் பட்சத்தில் போட்டியை குறைக்கும் வகையில் எந்த மாற்றமும் இல்லாத இருக்க வேண்டும் என்பதையும் மத்திய தொலைதொடர்பு துறை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அறப்போர் இயக்கத்தின் புகாரை அமைச்சர் உதயகுமார் மூடி மறைக்கிறார். அவரை பதவியிலிருந்து நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். துறையின் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, டான்பிட் இயக்குநர் ரவிச்சந்திரன் மற்றும் இந்த டெண்டரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். புதிய டெண்டர் போடும்பட்சத்தில் பாரபட்சமில்லாமல் போட்டியை குறைக்காத வண்ணம் டிசம்பர் 2019ல் வௌியிடப்பட்ட டெண்டரை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: