நாட்டிலேயே தமிழகத்தில் தான் 10 லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா பரிசோதனை .: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை

சென்னை: நாட்டிலேயே தமிழகத்தில் தான் 10 லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்து இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனாவால் விலை மதிப்பற்ற உயிர்களை காக்கும் வகையில் விலையுயர்ந்த மருந்துகளை வாங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோக்கில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன. மேலும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிடம்  இருந்து வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு உயிர்களை காக்கும் வகையில் விலையுயர்ந்த மருந்துகளை 1,200 குப்பிகள் Tocilizumab (400 mg), 42,500 குப்பிகள் Remdesivir (100 mg) மற்றும் 1,00,000 குப்பிகள் Enoxaparin (40 mg) ஊசி மருந்துகளை வாங்குவதற்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு, இதுவரை 1000 குப்பிகள், 1100 குப்பிகள் மற்றும் 1,00,000 குப்பிகள் முறையே பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள குப்பிகள் இன்றும் சில நாட்களில் கிடைத்து விடும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து 769 மருத்துவர்கள் மற்றும் 14,814 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories: