சென்னையில் கொரோனா பாதிப்பால் தனியார் டிவி ஒளிப்பதிவாளர் மரணம்; அதிர்ச்சியில் ஊடகவியலாளர்கள்...!!

சென்னை: சென்னையை சேர்ந்த தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் என்பவர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று 3645 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 74622 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 46 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 957 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தற்போது ஊடக துறையினர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முன்களத்தில் நின்று செய்திகளை வழங்கி வரும் ஊடகத்துறையினரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் இப்படி பல்வேறு துறையினை சார்ந்தவர்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் என்பவர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஊடக துறையில் இருந்து மரணம் அடையும் முதல் பத்திரிகையாளர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 40 வயதுதான்.

40 வயதிலேயே அவர் கொரோனா காரணமாக மரணம் அடைந்த சம்பவம் சக ஊடகத் துறை பணியாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தொற்றால் வேல்முருகன் கடந்த வாரம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Stories: