நியூசிலாந்து, சிங்கப்பூர், தென்கொரியாவில் சிக்கிய 198 பேர் சென்னை திரும்பினர்

சென்னை: நியுசிலாந்து, சிங்கப்பூர், தென்கொரியாவில் சிக்கித் தவித்த 198 பேர் சென்னை திரும்பினர். கொரோனா ஊரடங்கால் பலர் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்தில் சிக்கிய 50 இந்தியர்கள் சிறப்பு மீட்பு விமானத்தில் ஆக்லாந்து நகரில் இருந்து டெல்லி, திருவனந்தபுரம் வழியாக சென்னை வந்தனர். அவர்களில் 30 ஆண்கள், 19 பெண்கள், 1 சிறுவர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்த 2 பேர் இலவச தங்குமிடமான விஐடிக்கும், 48 பேர் கட்டணம் செலுத்தி தங்கும் இடமான சென்னை நகர ஓட்டல்களுக்கு அனுப்பப்பட்டனர்.

சிங்கப்பூரில் இருந்து சிறப்பு மீட்பு விமானம் சென்னை வந்தது. 63 ஆண்கள், 17 பெண்கள் என மொத்தம் 80 பேர் வந்தனர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக சென்னை நகரில் உள்ள ஓட்டல்களுக்கு அனுப்பப்பட்டனர். தென்கொரியாவில் உள்ள சீயோல் நகரில் இருந்து சிறப்பு தனி விமானத்தில் 68 பேர் சென்னை வந்தனர். அனைவரும் ஆண்கள். அவர்களில் 50 பேர் தென் கொரியாவை சேர்ந்த பொறியாளர்கள். காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரில் உள்ள தனியார் கார் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள். இந்திய அரசின் சிறப்பு அனுமதிபெற்று இந்தியா வந்துள்ளனர்.

அவர்கள் தனி பஸ்களில் பெரும்புதூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள 18 இந்தியர்களில் 11 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். அவர்கள், தனி பஸ்சில் ஆந்திரா மாநிலம் அனந்தப்பூருக்கு அனுப்பப்பட்டனர். தமிழகத்தை சேர்ந்த 7 பேர் சென்னையில் உள்ள ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த 68 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடக்கவில்லை. அவர்கள் தங்கியுள்ள ஓட்டல்களில் மருத்துவ பரிசோதனை நடக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

Related Stories: