வரத்து கால்வாய்கள் அடைப்பால் மழைநீரில் மூழ்கி போனது காரைக்குடி கல்லூரி சாலை: நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலைதுறை

காரைக்குடி:  காரைக்குடி கல்லூரி சாலையின் இருபுறங்களிலும் இருந்த வரத்து கால்வாய்கள் அடைத்து கிடப்பதால் மழைநீர் செல்ல முடியாமல் சாலை தேங்கி கிடக்கிறது. எனவே கால்வாய் அடைப்பை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பா பல்கலைக்கழகம், மத்திய மின்வேதியியல் ஆய்வகம், அரசு கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் தனியார் பள்ளி, கலைக்கல்லூரி உள்ளது. தவிர இச்சாலை வழியாகத்தான் கோட்டையூர், புதுவயல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் அதிகளவில் செல்கின்றனர்.

இச்சாலை கடந்த ஆண்டு நெடுஞ்சாலை துறையின் மூலம் இருபுறங்களிலும் அகலப்படுத்தப்பட்டு, சாலையின் நடுவே சென்டர் மீடியன் கட்டப்பட்டுள்ளது. சாலை அகலப்படுத்தும் பணியின் போது எடுக்கப்பட்ட மண் இருபுறங்களிலும் இருந்த மழைநீர் செல்லும் கால்வாய்களில் போடப்பட்டுள்ளது. பணி நடக்கும் போதே இதனை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைதுறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டனர். இக்கால்வாய் வழியாக மழைநீர் இணைப்பு கால்வாய் வழியாக காரைக்குடி கண்மாய் வரை செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால்வாய் தற்போது அடைத்து கிடப்பதால் மழைநீர் சாலையில் குளம்போல் தேங்கி கிடக்கும் அவலநிலை உள்ளது.

தண்ணீர் தேங்கி கிடப்பதால் கார், லாரி, பஸ் போன்ற வாகனங்கள் செல்லும் போது மழைநீர் நடந்து செல்வோர் மற்றும் டூவீலரில் செல்வோர் மீது படும்நிலை உள்ளது. மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு, பயனற்று கிடக்கும் நீர்நிலைகளை தூர்வாரி அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் பல்வேறு முயற்சிகள் எடுத்து மீட்டுவரும் நிலையில் இருக்கும் கால்வாயை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூகஆர்வலர்கள் இம்ரான்கான், வெங்கட்பாண்டி ஆகியோர் கூறுகையில், ‘காரைக்குடி கல்லூரி சாலை அகலப்படுத்தும் பணி மேற்கொண்ட போது சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன.

அதற்கு பதிலாக நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டாலும் அதனை முறையாக பராமரிக்காததால் சிலஇடங்களில் மரக்கன்றுகள் பட்டுபோய் உள்ளது. அதேபோல் பணி முடிந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் கால்வாயை அடைத்து கிடக்கும் மண்ணை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சாலையில் தண்ணீர் தேங்கி பயனற்று போவதோடு புதிதாக போடப்பட்ட சாலையிலும் அரிமானம் ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர ஒருசில இடங்களில் கால்வாயின் அகலத்தை குறைத்து உள்ளனர். எனவே நெடுஞ்சாலைதுறை உரிய நடவடிக்கை எடுத்து கால்வாயை சரிசெய்ய வேண்டும்’ என்றனர்.

Related Stories: