நீதி கிடைக்கும் வரை போராடுவோம்; சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கடிதம்..!!

நெல்லை; சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில்  கடையை திறந்து வைத்திருந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். அவர்களை காவல் நிலையத்தில் வைத்து போலீசார்  தாக்கியதே சாவுக்கு காரணம் என்று குற்றம்சாட்டி சாத்தான்குளத்தில் கடந்த 23-ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் வியாபாரிகளும் உறவினர்களும் ஈடுபட்டனர்.

2 எஸ்ஐக்கள் உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்படுவர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 போலீசாரும் கூண்டோடு பணிமாற்றம் செய்யப்படுவர் என கலெக்டர் உறுதி அளித்ததையடுத்து 7 மணி நேரம் நடந்த மறியல் போராட்டம்  கைவிடப்பட்டது. இதற்கிடையே, அடித்துக் கொன்ற போலீசார் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நீதித்துறை மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உறவினர்கள் உடல்களை வாங்கிச் சென்றனர்.  பின்னர் இருவரின் உடல்களும் ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்டு சாத்தான்குளத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு போராட்டம் கடைபிடிக்கப்படுகிறது. வரும், 30-ம் தேதி அனைத்து காவலர்களுக்கும் புகார் மனு அளிக்கும்  அறப்போராட்டம் நடைபெறும் என்றும் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள  திமுக எம்.பி கனிமொழி சாத்தான்குளம் காவல்துறை விசாரணையின்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறேன். இருவரின்  உயிரிழப்புக்கும் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தந்தை, மகன் உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மரணத்தில் அப்பட்டமான  மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்றும் எம்.பி.கனிமொழி கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே, சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த 2 வியாபாரிகளுக்கு உரிய நீதி வழங்க கோரி #JusticeForJeyarajAndFenix  என்ற ஹெஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி தமிழ்நாடு அளவில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: