கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் பாதுகாப்பு இல்லாமல் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள்: அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சத்துணவு பணியாளர்களை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபடுத்துவதாக சத்துணவு ஊழியர்கள் குமுறுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதியில் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வெப்பநிலை பரிசோதனை செய்தல், சத்து மாத்திரைகள், எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.காஞ்சிபுரம் நகராட்சியில் 250க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஒரு மையத்திற்கு 2 பணியாளர்கள் வீதம் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்தப் பணியாளர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபடுத்தும்போது முக கவசம் மட்டும் வழங்கப்படுகிறது. சானிடைசர், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நகராட்சியில் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில், பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக செல்லும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சாதாரண முக கவசம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு உரிய நோய் எதிர்ப்பாற்றல் மாத்திரைகள், பரிசோதனைகள் செய்யாமல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. போர்க்களத்திற்கு எவ்விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் செல்லும் போர்வீரனை போல, எவ்வித முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் இல்லாமல், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுமோ என அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: