‘கொரோனா’ தொற்று உறுதியானதால் நெல்லை இருட்டுக் கடை அல்வா’ உரிமையாளர் மருத்துவமனையில் தற்கொலை

நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் அருகில் இயங்கும் இருட்டுக் கடை அல்வா உலக புகழ் பெற்றது. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நெல்லையில் அல்வா வியாபாரம் தொடங்கினர். ஒரு குண்டு பல்பு வெளிச்சத்தில் மாலை 6 மணிக்கு தான் இந்தக் கடையின் விற்பனையே தொடங்கும். இதனால் தான் இந்தக் கடைக்கு இருட்டுக் கடை என பெயர் வந்தது. ஒரு மணி நேரத்தில் அல்வா முழுவதும் விற்பனையாகி விடும். பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தினமும் நீண்ட வரிசையில் காத்திருந்து அல்வா வாங்கிச் செல்வர். இந்நிலையில் நெல்லை பிரபல இருட்டுக்கடை உரிமையாளர் ஹரி சிங்குக்கும், அருகிலேயே மற்றொரு ஸ்வீட் ஸ்டால் நடத்தி வரும் அவரது மருமகனுக்கும் கடந்த இரண்டு நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதுவரை கடையில் விற்பனையை கவனித்த அவர்கள் பாளை.

பெருமாள்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முடிவுகள் நேற்று வெளியானது. அதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இருட்டுகடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்  தான் சிசிக்சை பெற்று வந்த மருத்துவமனையில் நேற்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கொரோனா தொற்று பரவிய பயத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளை பெருமாள்புரம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: