ஊரடங்கு உத்தரவை மீறியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின்சிங் மீது வழக்கு பதிவு: காரை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

சென்னை:  சென்னையில் கடந்த 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் அவர்கள் வீட்டின் அருகே உள்ள 2 கிலோ மீட்டர் தொலைவில்தான் செல்ல வேண்டும். பைக் மற்றும் கார்களை பயன்படுத்த கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்திருந்தார். அந்தவகையில், கடந்த சனிக்கிழமை திருவான்மியூர் பகுதியில் சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹோண்டா சிஆர்வி கார் ஒன்று வேகமாக வந்தது. இதை பார்த்த போக்குவரத்து போலீசார் காரை வழிமறித்து விசாரணை நடத்தினர். அப்போது  அடையார் பகுதியில் இருந்து மளிகை மற்றும் காய்கறிகள் வாங்க  திருவான்மியூரில் உள்ள கடைக்கு  காரில் வந்தாக காரை ஓட்டி வந்த நபர் தெரிவித்தார்.

உடனே போலீசார் கொரோனா நோய் தொற்றால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கார் மற்றும் பைக் பயன்படுத்த கூடாது என்று எச்சரித்தனர். அப்போது காரில் வந்த நபர் முகக்கவசம் அணிந்து இருந்ததால் போக்குவரத்து போலீசாருக்கு யார் என்று அடையாளம் தெரியவில்லை. இருந்தாலும், ஊரடங்கு உத்தரவை மீறியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் தான் போக்குவரத்து போலீசாருக்கு காரில் வந்த நபர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் என்று தெரியவந்தது.  போலீசார் வழக்கு பதிவு செய்யும் போது கூட  ராபின்சிங் தான் ஒரு கிரிக்கெட் வீரர் என்று சொல்லாமல் சட்டப்படி நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளார்.  பின்னர் அவர் மற்றொரு காரை வரவழைத்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் பறிமுதல் செய்த காரை போலீசார் பார்க்கிங்கில் நிறுத்த எடுத்தபோதுதான் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் கார் என தெரியவந்தது. இக்கட்டான நிலையில் கூட தான் ஒரு கிரிக்கெட் வீரர் என்று முன்னிலைப்படுத்தாமல்  ராபின் சிங் அங்கிருந்து சென்றது போக்குவரத்து போலீசாருக்கு தெரியவந்தது. இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் செயலுக்கு போக்குவரத்து போலீசார் வெகுவாக  பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: