பட்டிவீரன்பட்டி பகுதியில் சம்பங்கியில் கற்றாழை பூச்சி தாக்குதல்: வேரோடு அழுகுவதாக விவசாயிகள் கவலை

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி பகுதியில் கற்றாழை பூச்சி தாக்குதலால் சம்பங்கி பூ செடிகள் வேரோடு அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பட்டிவீரன்பட்டி அருகே செங்கட்டான்பட்டி, சிங்காரக்கோட்டை, சுந்தரராஜபுரம், நல்லாம்பிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் சம்பங்கி பூ விவசாயம் அதிகளவில் நடக்கிறது. போதி மழை இல்லாததாலும், கிணறுகள் வறண்டாதாலும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து கிடைக்கும் குறைந்தளவு தண்ணீரை கொண்டு பூச்செடிகளை வளர்த்து வந்தனர். ஏற்கனவே கொரோனா தடுப்பு ஊரடங்கால் விலையின்றி தவித்து வந்த விவசாயிகள் தற்போது சம்பங்கி பூ செடிகளில் கற்றாழை பூச்சிகள் தாக்கி வருவதால் மேலும் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘போர்வெல் தண்ணீர் மூலம் மிகவும் சிரமப்பட்டு சம்பங்கி பூச்செடிகளை வளர்த்து வந்தோம். தற்போது கற்றாழை பூச்சியால் செடிகள் வேரோடு அழுகி வருகின்றன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தோட்டக்கலைத்துறையினர் இப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த உரிய மருந்து வழங்க வேண்டும். மேலும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: