பச்சமலையான்கோட்டை மேட்டுபட்டியில் படாதபாடு படுத்தும் குடிநீர் தட்டுப்பாடு: கசியும் நீரை பிடித்து பயன்படுத்தும் அவலம்

சின்னாளபட்டி: பச்சமலையான்கோட்டை மேட்டுப்பட்டியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் கிராமமக்கள் கேட்வால்வில் கசியும் நீரை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நிலக்கோட்டை ஒன்றியம் பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் பச்சமலையான்கோட்டை, கேத்தையகவுண்டன்பட்டி, மேட்டுப்பட்டி, காமுபிள்ளைசத்திரம், செம்பட்டி, எஸ்.புதுக்கோட்டை உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் மேட்டுப்பட்டியில் குடிநீர் விநியோகம் சரிவர இல்லை. இதனால் அங்கு குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு கிராமமக்கள் குடங்களுடன் நீண்ட தூரம் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மேட்டுப்பட்டியில் இருந்து 1 கிமீ தூரத்தில் உள்ள பச்சமலையான்கோட்டை ஊராட்சி அலுவலகம் அருகேயுள்ள குடிநீர் வால்வு தொட்டியில் இருந்து வெளியேறும் கசிவு நீரை பிடித்து பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் பிரச்னையை போக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே மேட்டுப்பட்டி மக்கள் நலன் கருதி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஊராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* பச்சமலையான்கோட்டை ஊராட்சி அலுவலகம் அருகே கேட்வால்வில் இருந்து கசியும் குடிநீரை பிடிக்கும் மேட்டுப்பட்டி மக்கள்.

Related Stories: