அதிக பணம் பெற்றுக்கொண்டு பொதுமக்களை சொந்த ஊருக்கு ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் பறிமுதல்: டிரைவர் கைது

செங்கல்பட்டு: வெளி மாவட்ட பொதுமக்களிடம் அதிக பணம் பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு ஏற்றி சென்ற ஆம்புலன்சை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரை கைது செய்தனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி, கடந்த 19ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளியூர் செல்பவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு இ-பாஸ் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களில் சென்றுவர அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் சென்னை, திருவேற்காடு பகுதியை சேர்ந்த ஒரு முதியவர், 3 பெண்கள் உள்பட 6 பேர் சொந்த ஊரான செஞ்சிக்கு செல்ல  இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு, அனுமதி கிடைக்கவில்லை. இதனால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்தவேளையில் சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த மணிவண்ணன் (25) என்பவர், தனியார் ஆம்புலன்ஸ் மூலம், அதிக பணம் பெற்றுக்கொண்டு பயணிகளை ஏற்றி செல்வது அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை தொடர்பு கொண்டு, அவர்கள் பேசினர். அதற்கு மணிவண்ணன் ஒரு தொகை கேட்டுள்ளார். அதை கொடுக்க அவர்களும் தயாராக இருந்தனர்.

இதையடுத்து மணிவண்ணன், நேற்று முன்தினம் காலை, ஒரு முதியவர், 3 பெண்கள் உள்பட 6 பேரையும் அழைத்து கொண்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், செஞ்சிக்கு புறப்பட்டார். செல்லும் வழியில், எவ்வித இடையூறும் இருக்க கூடாது என்பதற்காக, சைரன் சத்தத்துடன் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பரனூர் சுங்கச்சாவடி அருகே செங்கல்பட்டு  டிஎஸ்பி கந்தன், தாலுகா எஸ்ஐ மணிகண்டன் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில், அங்கு சென்ற ஆம்புலன்சை போலீசார், சோதனை செய்தனர். அதில், ஒரு முதியவர், 3 பெண்கள் உள்பட 6 பேர் இருந்தனர். இதுபற்றி டிரைவர் மணிவண்ணனிடம் கேட்டபோது, செஞ்சி மருத்துவமனைக்கு செல்வதாக கூறினார். ஆனால், அவர்களிடம் அதற்கான எவ்வித அனுமதி கடிதமும், இ-பாசும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார், மணிவண்ணனிடம் துருவி துருவி விசாரித்தனர். அதில், ஊரடங்கு நேரத்தில் அதிக பணம் பெற்றுக்கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் பயணிகளை ஏற்றி செல்வதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரை கைது செய்து ஆம்புலன்சை பறிமுதல் செய்தனர். அதில் வந்தவர்களை, மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பினர்.

Related Stories: