திட்டத்தை ஓராண்டு நீட்டித்து அரசு உத்தரவு: அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீட்டில் கொரோனா நோய் சிகிச்சையும் சேர்ப்பு

சென்னை:  அரசு ஊழியர்களுக்காக 2016ல் கொண்டுவரப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் 2016 ஜூலை 1 முதல் 4 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள், காப்பீடு திட்டம் பெறுவதற்கான தகுதியுள்ள அவர்களின் குடும்பத்தினர் ரூ4 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சையும், சில குறிப்பிட்ட நோய்களுக்கு ரூ7.5 லட்சம் வரையிலான சிகிச்சையும் பெற முடியும். இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை யுனைடெட் இண்டியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இதற்காக ஒவ்வொரு ஊழியரின் பெயரிலும் ஆண்டுக்கு ரூ2100 இன்சூரன்ஸ் பிரீமியமாக வழங்கப்படுகிறது. இந்த தொகை ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ₹180 பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் காலம் வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த காப்பீட்டு திட்டம் வரும் ஜூலை 1ம் தேதி முதல் 2021 ஜூன் 30 வரை ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்க்கான சிகிச்சையும் சேர்க்கப்பட்டுள்ளது.  இந்த காப்பீடு கால நீட்டிப்பை யுனைடெட் இண்டியா இன்சூரன்ஸ் நிறுவனமும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, காப்பீடு கால நீட்டிப்பு உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளது.

Related Stories: