தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு திறன் பயிற்சி: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: தாயகம் திரும்பிய தமிழர்கள், திறன் பயிற்சிக்காக பதிவு செய்யலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களது திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு குறுகிய கால திறன் பயிற்சிகளை அளித்து, அதன் மூலம் தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் செய்கிறது. தற்போது கொரோனா தாக்கத்தால், வெளிநாடு மற்றும் இதர மாநிலங்களில் இருந்து தமிழர்கள் தாயகம் திரும்புகின்றனர். அவர்களது வேலை திறன் மற்றும் முன் அனுபவங்களை கண்டறிந்து, தகுதிக்கேற்ப தனியார் துறைகளில் பணி வாய்ப்பு பெற ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதையொட்டி, உரிய திறன் பயிற்சி வழங்கி, அவர்களுக்கு தனியார் துறை நிறுவனங்களில் பணிவாய்ப்பை பெற, தேவையான நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டு வருகின்றது. வெளிநாடு மற்றும் இதர மாநிலங்களில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள், தாங்கள் விரும்பும் திறன் பயிற்சி மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பை பெற தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இணையதளத்தில் https://www.tnskill.tn.gov.in பதிவு செய்து பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு துணை இயக்குநர், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: