நள்ளிரவில் சுவரில் துளைப்போட்டு நகைக் கடையில் கொள்ளை முயற்சி

* மர்மநபர்களுக்கு வலை

* வேடந்தாங்கல் அருகே பரபரப்பு

மதுராந்தகம்: நள்ளிரவில், நகை கடையின் சுவரில் துளைப்போட்டு, மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் வேடந்தாங்கல் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் அருகே உள்ள புழுதிவாக்கம் கூட்ரோட்டில், பல ஆண்டுகளாக துளசிராம் (50) என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இவரது, கடையில் புழுதிவாக்கம், வேடந்தாங்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், நகைகளை அடகு வைக்கவும், புதிய நகைகளை வாங்கவும் வருவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு துளசிராம், வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இரவு பணியில், காவலாளி ஒருவர் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் அவ்வழியாக சென்ற மக்கள், துளசிராம், நகைக்கடையின் பக்கவாட்டு சுவர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அங்கு தூங்கி கொண்டிருந்த காவலாளியிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து துளசிராமுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து, மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், சுவரை உடைத்து ஆள் நுழையும் அளவுக்கு துளைப்போட்டு, நகைகளை கொள்ளையடிக்க முயன்றது தெரிந்தது. இதில், 2க்கு மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், சுவரில் துளைப் போடுவதற்கு, டிரில்லிங் மெஷின் போன்ற இயந்திரங்களை பயன்படுத்தி இருக்க வேண்டும். அந்த நேரத்தில், அங்கு காவலில் இருந்த காவலாளிக்கு தெரியாமல் போனது எப்படி என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதே நேரத்தில், நகைகள் கொள்ளை போகவில்லை. இதனால், சுமார் ₹50 லட்சம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் தப்பியது என கூறப்படுகிறது.

இதற்கிடையில், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர், மோப்ப நாய் நகை கடையில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: