தெர்மல் ஸ்கேனர் வாங்கியதில் முறைகேடு இல்லை: சென்னை மாநகராட்சி விளக்கம்

சென்னை: தெர்மல் ஸ்கேனர் வாங்கியதில் முறைகேடு நடைபெறவில்லை என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியால் வெப்ப மானியை  தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ரூ.1,765 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் கொள்முதல் செய்யப்பட்ட பத்தாயிரம் வெப்ப மானிகளின் மொத்த விலையானது (வரிகள் உட்பட) ரூ.2.08 கோடி ஆகும். தெர்மல் ஸ்கேனர் இந்திய நிறுவனத்தின் மூலம் தயார் செய்யப்பட்டது.  

பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுநாள் வரை சுமார் 10.41  லட்சம் வீடுகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் கேட்டறிந்ததன் விளைவாக 49,638 பேருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டு, அவர்களில் 8,302 பேருக்குமேல் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பமானிகள் அனைத்தும் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழுடன் பெறப்பட்டுள்ளன. மேலும் இந்த வெப்பமானியில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் விற்பனை செய்யப்பட்ட நிறுவனத்தின் சார்பாக உடனடியாக விலையில்லாமல் புதிய வெப்பமானி மாற்றித் தரப்படும் என உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இதுவரை சுமார் 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், கொரோனா வைரஸ் தொற்று கண்டறிய உலக அளவில் ஆர்டிபிசிஆர் டெஸ்ட் ஒன்று தான் சிறந்த வழி என்று உலக சுகாதார நிறுவனமும் அதேபோன்று இந்தியாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் உறுதிசெய்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: