சென்னையில் 55 இடங்களில் 17 ஆயிரம் படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கோவிட் கேர் மையமாக மாற்றப்படவுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.  சென்னை மாநகராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து உள்ளனர். அத்திப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை கோவிட் கேர் மையமாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி இன்னும் ஒரு வாரத்தில் முடியும்.

சென்னையில் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து 4 பிரிவுகளாக பிரித்து சிகிச்சை அளித்து வருகிறோம்.  மூச்சு திணறல் போன்ற  பிரச்னைகள் இருந்தால் அவர்களை உயர் வசதிக்கொண்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கிறோம். அடுத்து மருத்துவ கண்காணிப்பு தேவை என்பவர்களை சுகாதாரத்துறை கீழ் செயல்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 55 மையங்களில் 17500 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் கேர் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 3200 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா போன்ற அபாய சூழலில் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக கோவிட் கேர் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: